1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:22 IST)

நடிகை நிலானி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி

சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை கே.கே. நகரில் லலித்குமார் என்கிற வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள, அதற்கு நடிகை நிலானியே காரணம் என செய்திகள் தீவிரமாக பரவியது. மேலும், லலித்குமாரும், நிலானியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி, லலித்குமாரை, நிலானி ஏமாற்றியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது போல் செய்திகள் வெளியாகின. 
 
ஆனால், நிலானி அளித்த பேட்டியின் மூலம், அது உண்மையில்லை என்பது தெரிய வந்தது. தன்னுடன் நட்பாக பழகிய லலித்குமாரை ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும், ஆனால், அவர் பல பெண்களை ஏமாற்றியவர் என்பது தெரிந்ததும், அவரை விட்டு விலகியதாகவும் நிலானி கூறினார். அதேபோல், நிலானிக்கு லலித்குமார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார் என்பதற்கு ஆதரமாக நிலானியுடன் லலித்குமார் செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகின.
 
இந்நிலையில், மரணமடைந்த லலித்குமாரின் சகோதரர் நிலானிக்கு எதிராக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், என் சகோதரரின் இறப்புக்கு நிலானியே காரணம். லலித்குமார் மீது நிலானி தவறான புகாரை அளித்ததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். என் சகோதரரை அவர் ஏமாற்றிவிட்டு நாடகம் ஆடுகிறார். அவருக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு உள்ளது. மேலும், அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.
 
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், சென்னை ஆலப்பாக்கத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக தங்கியிருந்த நிலானி இன்று கொசு மருந்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.