52 வருட விஸ்வாசம் மாறியது.. ஓபிஎஸ் காரில் திமுக கொடி, ஸ்டாலின் புகைப்படம்.. ஜெயலலிதா புகைப்படம் அகற்றம்
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக அதிமுகவின் முகமாக அறியப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், தற்போது தனது அரசியல் பாதையை முழுமையாக மாற்றியுள்ளார்.
52 ஆண்டுகால அதிமுக விஸ்வாசத்தை துறந்து, அவர் திமுகவில் இணைந்தது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தின் அடையாளமாக, அவரது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக திமுக கொடி கட்டப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, பல ஆண்டுகளாக அவரது காரின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புகைப்படம் இடம் பிடித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு பின் அதிமுகவின் முக்கிய தூணாக கருதப்பட்ட ஓபிஎஸ், இப்போது ஸ்டாலினின் தலைமையை ஏற்று "தாய் கழகம்" என்று அழைத்து இணைந்திருப்பது அரசியல் மாற்றத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பலத்தை மேலும் கூட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த செயல் விவாத பொருளாகியுள்ளது.
Edited by Siva
