வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:36 IST)

வழக்கறிஞரை தாக்கிய காரில் வந்த கும்பல்

karur
கரூர் அருகே, சவுக்கு சங்கர் யூடியூப் சேனலின் அட்மின் சூர்யா மற்றும் பிரதீப்  ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த வழக்கறிஞர் ராஜா என்பவரை காரில் வந்த 6 பேர்கள் கொண்ட கும்பல் தாக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
6 பேர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் ராஜா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
 
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. வழக்கறிஞரான இவர் சவுக்கு சங்கர் ஆதரவாளர் என கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று சவுக்கு சங்கர் மீடியாவை சேர்ந்த சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் ராஜாவை சந்திப்பதற்காக வேலாயுதம்பாளையம் வந்துள்ளனர். இந்த மூன்று பேரும் வேலாயுதம்பாளையம் பாலத்துரை பகுதியில் உள்ள பேக்கரியில் வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது, ஒரு காரில் வந்த இறங்கிய அடையாளம் தெரியாத 6 பேர்கள் வழக்கறிஞர் ராஜா மற்றும் சூரியா, பிரதீப் ஆகிய மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
 
அதில், வழக்கறிஞர் ராஜாவுக்கு தாடை மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியவர்களை திருப்பித் தாக்க, 6 பேரும் அவர்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை துரத்திக் கொண்டு சென்ற இருவரும் தப்பியோடிய மர்ம நபர்கள் மீது பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்தநிலையில், பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட ராஜா வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
 
வழக்கறிஞர் ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
 
சவுக்கு சங்கர் ஆதரவாளர்கள் கரூர் பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.