பொள்ளாச்சி விவகாரம்: சமூக வலைத்தள பயனாளிகள் மீது வழக்குப்பதிவு
கடந்த இரண்டு நாட்களாக பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள் நூற்றுக்கும் மேலானவர்களை சீரழித்த கயவர்கள் குறித்த செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கயவர்கள் பின்னணியில் ஒரு அரசியல் கட்சியும் ஒரு அரசியல் பிரபலமும் இருப்பதாக சமூக வலைத்தள பயனாளிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர்கள் மீது எந்தவித ஆதாரமும் இன்றி பொள்ளாச்சி விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தி அவர்கள் மீது அவதூறு பரப்பியதாக சில சமூக வலைத்தள பயனாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலர் சிங்கை ராமச்சந்திரன் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பொள்ளாச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பற்றிய பின்னணி விவரங்களை நடிகர்கள், அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் சமூகவலைதளங்களில் தங்கள் ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குற்றச்சாட்டப்பட்டுள்ள அனைவரும் அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்பதாலும், அதனாலேயே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் மு.க ஸ்டாலின், சீமான், ஜிவி பிரகாஷ், சித்தார்த் உள்பட பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களுடைய கருத்துக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.