செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (07:29 IST)

சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர்.. ரயில்கள் எங்கிருந்து கிளம்புகின்றன?

central
சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அடுத்து வட மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்களிலும், ரயில் நிலையங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதை அடுத்து ரயில் போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருப்பதை அடுத்து, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்களும் ஆவடி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, சென்னை புறநகர் ஆவடி ரயில் நிலையத்தில் பயணிகள் குவிந்து வருவதாகவும், வெளிமாவட்டம் செல்லும் மக்கள் ஆவடி ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்ததால் அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், ரயில்வே காவல்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை பயணிகளுக்கு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva