திடீரென வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சோனம் வாங்சுக்.. என்ன காரணம்?
லடாக்கில் குளிர்கால உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
லே நகரில் உள்ள என்.டி.எஸ் நினைவு பூங்காவில் லடாக் மாநில உரிமைகளுக்காகவும், ஆறாவது அட்டவணை பாதுகாப்பு மற்றும் மாநில அந்தஸ்து கோரியும் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. குளிர்காலத்தில் தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்தும், கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்தவர்கள் குறித்த நீதி விசாரணை அறிக்கையை வெளியிட வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் என்ற காவல் துறையின் அறிக்கையின் அடிப்படையில், சோனம் வாங்சுக் லே பகுதிக்குள் அடுத்த 60 நாட்களுக்கு நுழையத்தடை விதிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டை பவுன்சர்கள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவலர்கள் சூழ்ந்துள்ளதாகவும், அமைதியான போராட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் சோனம் வாங்சுக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாட போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி கேள்விகளை எழுப்புபவர்கள் மீது அடக்குமுறைகளைக் கையாள்வது லடாக் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

