இனி பள்ளிகள் அருகில் போதைப்பொருள் விற்க முடியாது.. தவெக அரசின் அதிரடி உத்தரவு...
பள்ளி மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து காக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் புதிய அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும் போதை எதிர்ப்பு மன்றம் மற்றும் மாணவர் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு, விழிப்புணர்வு பேரணிகள், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்களின் பார்வையில் படும்படி விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் உதவி எண் 10581 ஆகியவை காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து தனிப்பட்ட விவரங்களை வெளிப்படுத்தாமல், ரகசியமாக தகவல் தெரிவிக்க 'Drug Free TN' செயலி குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
பள்ளிகளை சுற்றி 100 கெஜம் தூரத்திற்குள் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். பழக்கத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ள மாணவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஆலோசனை வழங்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். மேலும், பெற்றோர் கூட்டங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு மற்றும் வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அனைத்துப் பள்ளிகளிலும் இந்த நடவடிக்கைகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

