ஒரே டிக்கெட்டில் 3 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்களுக்கு அரிய வாய்ப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை புகழ்பெற்ற 3 நாள் பவித்ரோற்சவ விழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 22-ஆம் தேதி மரக்கன்று பிரதிஷ்டையுடன் விழா தொடங்குகிறது.
ஆண்டு முழுவதும் கோவிலில் நடைபெறும் அர்ச்சனைகள் மற்றும் பல்வேறு விழாக்களின் போது, பக்தர்களாலோ அல்லது ஊழியர்களாலோ தங்களையும் அறியாமல் ஏற்படும் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், ஆலயத்தின் புனிதத்தைக் காக்கவும் இந்த பவித்ரோற்சவ விழா ஆகம விதிப்படி நடத்தப்படுகிறது.
இந்த ஆன்மீக வழிபாட்டில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்காக, வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி காலை 10 மணிக்குத் திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகளை வெளியிடவுள்ளது. இதன் கட்டணம் 5,000 ரூபாய் ஆகும். இந்த சிறப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பக்தர்கள், 4 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவ விழாவின் முக்கிய பூஜைகளில் கலந்துகொள்ளலாம்.
இதன் மூலம் எவ்வித தொந்தரவும் இன்றி தொடர்ந்து 3 நாட்கள் நேரடியாக ஏழுமலையானைத் தரிசிக்கும் அரிய வாய்ப்பு பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இந்த தரிசன டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள், குறிப்பிட்ட நாட்களில் காலை 7 மணிக்குத் தங்களது அடையாள அட்டையுடன் பாரம்பரிய உடையில் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் வர வேண்டும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Edited by Siva
