செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (12:40 IST)

மாநிலங்களவை தேர்தல் விறுவிறுப்பு..! 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு..!!

Rajaysabha Election
15 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், கர்நாடகா, இமாசலப்பிரதேசத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
வரும் ஏப்ரல் மாதம் 15 மாநிலங்களில் முடிவடையவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தி, ஜெ.பி.நட்டா, அஸ்வினி வைஷ்ணவ் உட்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்கள், கர்நாடகாவில் 4 இடங்கள், இமாசலப்பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 
 
உத்தரப்பிரதேசத்தில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாஜக 7, சமாஜ்வாதி 3 மாநிலங்களவை எம்.பிக்களைப் பெற முடியும். ஆனால் பாஜக 8 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ்குமார் ராஜினாமா செய்தது சமாஜ்வாதிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
 
தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, இமாசலப்பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து எம்.எல்.ஏக்களும் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

 
இந்நிலையில் 3 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் வாக்களித்தார். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் 29ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.