குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பு.! சீரம் இந்தியா நிறுவனம் தகவல்..!
குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்றை தொடர்ந்து உலகம் முழுவதும் தற்போது குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த தொற்றை, உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரை காக்க, குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில், நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார். ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும் என்று அவர் கூறியுள்ளார்.