போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு பேச தயார்! பிரதமர் மோடி அறிவிப்பு!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளோடு பேச தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 74 நாட்களாக விவசாய அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க அக்டோபர் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று கூட்டத்தொடரில் விவசாய சட்டங்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி “வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த தயார்” என தெரிவித்துள்ளார்.
இதுநாள் வரை மத்திய அமைச்சர்கள் பலர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவுகளை எட்ட முடியாத சூழலில் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.