திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (12:24 IST)

தங்கை மீது ஆசை கொண்ட அண்ணன்; கணவனிடம் இருந்து பிரிக்க சதி! – நடிகர் உட்பட மூவர் கைது!

கேரளாவில் தங்கை முறை பெண் மீது கொண்ட காதலால் அவரை கணவரிடமிருந்து பிரிக்க நபர் ஒருவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவர் சுபு. இவர் இவரது உறவினரில் தங்கை முறையில் உள்ள பெண் ஒருவர் மீது ஆசை கொண்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆன நிலையில் சுபு வசிக்கும் பகுதியிலேயே அவர்களும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தம்பதியினரை பிரிக்க நினைத்த சுபு, அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பெண்ணின் கணவருக்கு மொட்டை கடுதாசி அனுப்பியுள்ளார். இதுகுறித்து பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் கணவருக்கும், கணவரின் பெற்றோருக்கும் இளம்பெண்ணின் ஆபாசமான புகைப்படங்க அநாமதேய எண் ஒன்றிலிருந்து வந்துள்ளது. இதனால் விவகாரம் பெரிதாக கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கணவனை பிரிந்து சென்றுள்ளார் அந்த பெண். மேலும் தன்னை ஆபாசமாக சித்தரித்த படங்கள் குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையில் செல்போன் கடை ஊழியர் ஒருவர் போலியான ஆதாரங்களை கொண்டு சிம் கார்டு வாங்கி சின்னத்திரை நடிகர் ஜாஸ்மீர்கானிடம் கொடுத்துள்ளார். ஜாஸ்மீர்கான் இளம்பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து இளம்பெண்ணின் கணவருக்கு அனுப்பியது தெரிய வந்துள்ளது. மேலும் ஜாச்மீர்கான் சுபுவின் நண்பர் என்பதும், சுபு சொல்லியே இதை செய்ததும் தெரிய வந்துள்ளது.

தங்கை முறையான பெண்ணின் மீது ஆசைக்கொண்ட சுபு அந்த பெண்ணை அடைவதற்காக ஜாஸ்மீர்கான் உதவியுடன் தம்பதிகளை பிரிக்க திட்டம் போட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.