வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (17:23 IST)

ஜெகதீப் தன்கர் - ஜெயா பச்சன் இடையே காரசார விவாதம்.! தேதி குறிப்பிடாமல் மாநிலங்களவை ஒத்திவைப்பு..!!

Jaya Bachan
நாடாளுமன்ற மாநிலங்களவை திங்கட்கிழமை வரை நடைபெற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமலியில் ஈடுபட்டனர். மேலும் உறுப்பினர்கள் பேசும் போது மைக் ஆப் செய்யப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
 
இன்றைய அவை நடவடிக்கையின்போது, எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டி அவை வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பிற்பகலில் சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சனுக்கும் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
 
ஜெயா பச்சனை பார்த்து சக நடிகரான அமிதாப் பச்சனை திருமணம் செய்தவர்’’ என்பதை குறிப்பிடும் வகையில் ‛ஜெயா அமிதாப் பச்சன்’ எனக்கூறி ஜெகதீப் தன்கர் அழைத்தார். அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் ஆகியோர் கணவன் மனைவி தான் என்றாலும் கூட தனக்கு கணவரை வைத்து அடையாளம் காட்ட வேண்டாம் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் மீண்டும் 2வது முறையாக ஜெகதீப் தன்கர் இப்படி கூறியதால் ஜெயா பச்சன் கடும் கோபமடைந்தார்.
 
ஜெகதீப் தன்கரிடம் சண்டையிட்ட அவர்,  ‛‛நான் ஜெயா அமிதாப் பச்சன் என்ற கூறியதன் தொனி எனக்கு பிடிக்கவில்லை. நான் கலைஞர். ஒவ்வொருவின் உடல் அசைவை என்னால் புரிந்து கொள்ள முடியும். மன்னிப்புடன் ஒன்றை கூறி கொள்கிறேன். உங்களின் தொனி ஏற்புடையதாக இல்லை. நீங்கள் தலைவர் இருக்கையில் இருக்கலாம். அதற்காக உங்களின் தொனியை ஏற்க முடியாது என்று ஜெயா பச்சன் தெரிவித்தார்.
 
இதனால் கோபம் அடைந்த ஜெகதீப் தன்கர், ஜெயா ஜி உங்கள் இருக்கையில் இருங்கள். நீங்கள் பெரியளவில் நற்பெயரை சம்பாதித்துள்ளீர்கள். ஒரு நடிகர் என்பவர் இயக்குனருக்கு உட்பட்டவர். நான் இங்கிருந்து பார்ப்பதை நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் ஒரு பிரபலமாக இருக்கலாம், ஆனால் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
 
இதற்கு ஜெயா பச்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் எம்பிகளும் ஜெகதீப் தன்கரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் மாநிலங்களவை களேபரமானது. இதையடுத்து ஜெயாபச்சனுக்கு ஆதரவாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 


எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. திங்கட்கிழமை வரை மாநிலங்களவை நடைபெற இருந்த நிலையில் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது.