1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (15:44 IST)

புண்ணிய தலங்களுக்கு செல்ல சுற்றுலா ரயில் அறிமுகம்..! நெல்லை முதல் அயோத்தி வரை இயக்கம்..!

Special Train
நாட்டில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலங்களை குறைந்த கட்டணத்தில் சென்று தரிசிக்கும் வகையில்  இந்திய ரயில்வே துறை சார்பில் ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி ஆன்மிக சுற்றுலா ரயில்  குறித்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.  சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள  இந்த சுற்றுலா ரயிலான பாரத் கவுரவ் ரயிலில்  11 ஸ்லீப்பர் கோச்சுகள் உட்பட 14 பெட்டிகள் உள்ளன. இந்த ரயில் ஐ.ஆர்.சி.டி.சி., தென்மண்டலம் சார்பில் இயக்கப்படுகிறது.  
 
நெல்லையில் இருந்து, புண்ணிய தீர்த்த யாத்திரை’ என்ற பெயரில் இந்த ரயில் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் மூலம் நெல்லையில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை  வழியாக காசி, திரிவேணி சங்கமம் (பிரயாக்ராஜ்), கயா மற்றும் அயோத்யா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மொத்தம் 9 நாட்களுக்கான சுற்றுப்பயணத் திட்டமாக இது அமைந்துள்ளது. இந்த ஆன்மிக பயணம் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது. இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.18,550 கட்டணமாக வசூலிக்கப்படும். மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரயிலில் பயணித்தால் எல்டிசி சான்றிதழ்களை பெறலாம். 

 
மேலும் இந்த சுற்றுலா ரயில் குறித்த விரிவான தகவல்களுக்கு  www.irctctourism.com என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.