ஆந்திராவில் கொரோனாவிற்கு முதல் பலி! 55 வயது நபர் உயிரிழந்தார்
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவிய மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 335 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. இரண்டாவதாக தமிழகத்தில் 309 பேர்களுக்கும் மூன்றாவதாக கேரளாவில் 286 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திரபிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக சமீபத்தில் உயர்ந்தது. அதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் யாருமில்லை என்ற ஒரு தகவல் நிம்மதியை தந்தது
ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் 55 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் மார்ச் 30ஆம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார் என்பதும் அதனை அடுத்து அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் கொரோனாவால்தான் உயிரிழந்தார் என்பது உறுதியாகியுள்ளது என்பதும் இதனை அடுத்து ஆந்திர மாநிலத்தில் கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் உயிரிழந்தவரின் மகன் டெல்லி சென்று வந்த நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது தந்தை காலமாகி விட்டதால் மகன் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்