200 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுகிறதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
2000 ரூபாய் நோட்டு ஏற்கனவே திரும்பப் பெறப்பட்ட நிலையில், தற்போது 200 ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்படுவதாக வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 2000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற நிலையில், 200 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற போவதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி இதனை மறுத்துள்ளது. தற்போது 200 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற எந்த திட்டமும் இல்லை என்றும், 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் அதிகம் இருப்பதால், மக்கள் கள்ள நோட்டுக்களை இனங்கண்டறிய வேண்டும் என்ற எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மக்கள் 500, 200 ரூபாய் நோட்டுக்களை வாங்கும்போது உண்மையான நோட்டுகளா என்பதை உறுதி செய்து கொண்டு வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 200 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் தெளிவாக இருக்கும் என்றும், நுண் எழுத்துக்களில் ஆர்பிஐ, பாரத், இந்தியா என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் என்றும், 200 என சிறியதாக எழுதப்பட்டிருக்கும் என்றும், அதன் வலது புறத்தில் அசோக சக்கர சின்னம் இருக்கும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
200 ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது இதையெல்லாம் கவனித்து மக்கள் வாங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Edited by Siva