உயர் பதவிக்கு நேரடி நியமனம் ரத்து.! எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு.!!
லேட்ரல் என்ட்ரி மூலம் மத்திய அரசுப் பணிகளை நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் லேட்டரல் என்ட்ரி முறை என்பது முன்பில் இருந்தே இருந்து வந்தது. இதன்படி, தகுதியான ஆட்கள், இட ஒதுக்கீடு வரைமுறை இல்லாமல் நியமனம் செய்யப்படுவார்கள். கடந்த 17ஆம் தேதி, யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு குறித்த ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
அதில், இணைச் செயலாளர், இயக்குநர், துணைச் செயலாளர் என மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் 45 மூத்த அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த நிபுணர்களை நேரடி பணி நியமனம் செய்ய மத்திய அரசு தெரிவித்தது.
இவ்வாறு செய்வதன் மூலம், இட ஒதுக்கீடு பறிக்கப்படுவதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு உயர் பதவிகளில் நேரடி பணி நியமனம் சமூக நீதி மீதான தாக்குதல்' என முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசுப்பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசுப்பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வேலைவாய்ப்புகளில் சமூகநீதியை நிலை நாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தி உள்ளதாக அந்த கடிதத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.