வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (13:08 IST)

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு.! ஆகஸ்ட் 27-ல் குற்றச்சாட்டு பதிவு.! சிறப்பு நீதிமன்றம் அதிரடி.!!

Minister Periyasamy
வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆகஸ்ட் 27ம் தேதி குற்றச்சாட்டு பதிவுகள் நடத்தப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டுமனையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியில் இருந்த கணேசன் என்பவருக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக, அமைச்சர் பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2012ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28ம் தேதி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, 1 லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணையும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
 
மேலும் அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும் என்றும், வழக்கை தினந்தோறும் விசாரித்து ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட கணேசன் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகியோர் நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவு படி 1 லட்சம் ரூபாய்க்கான பிணை தொகை மற்றும் இரு நபர் உத்தரவாதம் தாக்கல் செய்தனர்.
 
இதற்கிடையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், விசாரணையைத் தள்ளிவைக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது.

 
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆகஸ்ட் 27ம் தேதி குற்றச்சாட்டு பதிவுகள் நடத்தப்படும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.