1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 ஜனவரி 2025 (19:02 IST)

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

Annamalai
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடு என நவாஸ் கனி எம்பி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ஆன்மீக பூமியான தமிழகத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த ஆலயங்களுக்கும் அவற்றிற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன.
 
குறிப்பாக, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் திரு. நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும்.
 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டு காலமாக, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
 
உடனடியாக, இது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாகத் தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே தொடர வேண்டும் என்று, அனைத்து சமூக மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
 
 
Edited by Siva