விலையில்லா கல்வி, மருத்துவம் இலவசம் ஆகாது..! – பிரதமர் மோடிக்கு முதல்வர் பதிலடி!
மாநில அரசுகள் இலவசங்கள் நிறைய அளித்து நாட்டின் பொருளாதாரத்தை அபாயத்தில் தள்ளுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழி விரைவுச்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “நாட்டின் முன்னேற்றத்திற்கு இலவசம் தரும் கலாச்சாரம் ஆபத்தாக உள்ளது. இந்த கலாச்சாரத்துடன் இணைந்திருப்பவர்கள் விரைவு சாலைகள், புதிய விமான நிலையங்கள் அல்லது பாதுகாப்பு பகுதிகளை அமைக்க மாட்டார்கள்” என பேசியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “டெல்லியில் 18 லட்சம் மாணவர்களுக்கு இலவசமான தரமான கல்வி அளிக்கப்படுகிறது. டெல்லி மருத்துவமனைகளில் 2 கோடி பேருக்கு தரமான மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வது இலவசமாக அளிப்பது ஆகாது. கெஜ்ரிவால் மற்றவர்களை போல் தனக்காக விமானங்களை வாங்கி வைத்துக் கொண்டிருக்கவில்லை” என்று கூறியுள்ளார்.