5 வயது குழந்தைக்கும் ஆதார் பயோமெட்ரிக் அவசியம்.. ஆன்லைனில் செய்ய முடியாது.. செப் 30 வரை அவகாசம்...
நாடு முழுவதும் இதுவரை 2 கோடி பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் தங்களது கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை செப்டம்பர் 30-ம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்களுடன் ஆதார் வழங்கப்படுகிறது. அந்த வயதில் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படுவதில்லை. குழந்தைகள் 5 வயதை கடந்ததும் ஆதார் மையத்துக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்வது அவசியம். இதேபோல் 15 வயதிலும் மீண்டும் பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.
கடந்த 2025 செப்டம்பர் முதல் பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அரசுகளுடன் இணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 2 கோடி மாணவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பை இணையதளம் மூலம் செய்ய முடியாது. பெற்றோர் குழந்தைகளை அருகிலுள்ள ஆதார் மையத்துக்கு நேரில் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தையின் ஆதார் அட்டை, கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அங்கு பதிவு செய்யப்படும். அருகிலுள்ள மையத்தை புவன் ஆதார் போர்டல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பயோமெட்ரிக் விவரங்களை சரியான நேரத்தில் புதுப்பிப்பது, எதிர்காலத்தில் கல்வி உதவித்தொகை, அரசு நலத்திட்டங்கள் மற்றும் NEET, JEE, CUET போன்ற நுழைவுத் தேர்வுகளில் ஆதார் அங்கீகாரம் தொடர்பான சிக்கல்களை தவிர்க்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva

