8வது ஊதியக் குழு.. முக்கிய பணியை முடித்துவிட்ட மத்திய அரசு.. அறிவிப்பு எப்போது?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 8வது ஊதியக் குழுவின் தரவு சமர்ப்பிக்கும் அவகாசம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்களது ஊழியர்களின் ஊதியம், படிகள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை ஆன்லைன் போர்ட்டல் மூலம் சமர்ப்பித்துள்ளன. பல்வேறு துறைகள் கோரியதைக் கருத்தில் கொண்டு, இந்த அவகாசம் ஏற்கனவே ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தரவு சேகரிப்புப் பணி நிறைவடைந்துள்ளதை அடுத்து, அடுத்த கட்டமாக ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளுடன் நேரடி ஆலோசனைக் கூட்டங்களை கமிஷன் நடத்தவுள்ளது. டெல்லி, சென்னை, புதுச்சேரி மற்றும் சண்டிகார் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட நிதி மற்றும் நிர்வாக தரவுகளை ஆய்வு செய்து, பரிந்துரைகளை தயாரிக்க காலம் எடுக்கும் என்பதால், உடனடியாக சம்பள உயர்வு அறிவிக்கப்படாது.
ஊழியர்கள் தரப்பில் பிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வு, அகவிலைப்படி சரத்தில் மாற்றம் மற்றும் வரி விலக்கு போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. கமிஷன் தனது இறுதி அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்து, அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே புதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் நடைமுறைக்கு வரும். இறுதி அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Edited by Siva
