தேர்தலில் பங்கேற்பதில் புரட்சியை ஏற்படுத்துங்கள்..!இளைஞர்களுக்கு ராஜீவ் குமார் அழைப்பு...!!
தேர்தலில் பங்கேற்பதில் ஒரு புரட்சியை ஏற்படுத்துமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் குறித்து வாக்களர்களுக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2024-ன் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறது. அதனை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வாக்களர்களுக்கு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நமது மகத்தான ஜனநாயகத்தில் தேர்தல் என்பது மக்களுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார்.
நீங்களே அரசங்காத்தை தீர்மானிக்கிறீர்கள் என்றும் இதனை நீங்கள், உங்களின் நலனுக்காக செய்கிறீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். உங்களின் குடும்பத்துக்காக, உங்கள் குழந்தைக்காக, உங்களின் கிராமத்துக்காக, நகரத்துக்காக, இந்த நாட்டுக்காகச் செய்கிறீர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் மிகவும் அழகான அனுபவம் தேர்தல் என்றும் அதில் வாக்களிப்பது போல எதுவுமே இல்லை என்றும் தேர்தலில் பங்கேற்பதில் ஒரு புரட்சியை ஏற்படுத்துமாறு நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஒரு வாக்கின் முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் ஒரு முக்கியமான போட்டியில் ஒரு வாக்கு எவ்வளவு முக்கியமான என்ற பல நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம் என்றும் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களர்கள் வாக்களிக்கச் செல்லும்போது வெப்ப அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். என்றாலும் இந்திய வாக்காளர்களின் உந்துசக்தி கோடை வெப்பத்தைத் தோற்கடிக்கும் என்பது எனக்குத் தெரியும் என்று ராஜீவ் குமார் கூறியுள்ளார்.