செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2024 (17:07 IST)

தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் நாளை மக்களவை தேர்தல்..! எந்தெந்த மாநிலங்களில் தேர்தல்..?

Election
18-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்பட 21 மாநிலங்களின் நாளை நடைபெறுகிறது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது.
 
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் காலை 5:30 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
இதேபோன்று, வடகிழக்கு மாநிலங்களில் தலா 2 தொகுதிகளை கொண்ட அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவிலும், தலா ஒரு தொகுதியை உடைய மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களிலும், லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
மேலும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அசாம், பிகார், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
 
அதாவது 25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 12 இடங்களுக்கும், 80 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 8 இடங்களுக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பிகாரில் 4 இடங்களுக்கும், மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 6 தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
 
48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட்ராவில் 5 இடங்களுக்கும், 42 தொகுதிகளை உள்ளட்டக்கிய மேற்குவங்கத்தில் 3 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அசாமில் 14 மக்களவைத் தொகுதிகளில் ஐந்திலும், 2 இடங்கள் கொண்ட மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

 
11 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் ஒரு இடத்திற்கும், 5 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும், 2 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் ஒரு தொகுதிக்கும் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.  ஒட்டுமொத்தமாக 102 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் ஆயிரத்து 625 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.