தமிழகத்தில் எத்தனை கோடி பறிமுதல்..? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டை இல்லையென்றாலும், 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேற்கொண்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும் என்றார். தமிழகம் முழுவதும் 68,321 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் பதற்றமான 8,050 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 183 எனக் கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனத் சத்யபிரதா சாகு கூறினார்.
44,801 வாக்குப்பதிவு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் 6 மணிக்குள் வாக்கு சாவடிக்கு வந்து வரிசையில் இருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
6.23 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதிப்பெற்றுள்ளனர் என்றும் வாக்களிக்க வரும் முதியோருக்கு இலவச பேருந்து சேவை வழங்கபடவுள்ளது எனவும் அவர் கூறினார். 39 இடங்களில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் கூறினார்.
தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று சத்யபிரதா சாகு குறிப்பிட்டார். சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றும் இதுவரை ரூ.173.85 கோடி பணம், ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம் எனத் அவர் கூறினார். வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு 15 கம்பெனி மத்திய ஆயுதப் படை வீரர்களால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.