வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (12:45 IST)

பிரபல வில்லன் நடிகரை விரட்டி விட்ட மார்வெல்! அப்போ அவெஞ்சர்ஸ் நிலைமை?? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Kang Dynasty
பிரபலமான ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்கள் தயாரிப்பு நிறுவனம் முக்கிய நடிகர் ஒருவரை தங்களது படங்களில் இருந்து நீக்கியுள்ளது.



ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் ஹீரோ படங்கள் தயாரிக்கும் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், தோர் என பல மார்வெல் காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை வைத்து 2008 முதலாக இவர்கள் தயாரித்து வரும் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2018ல் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், எண்ட் கேம் மூலமாக 10 ஆண்டு அவெஞ்சர்ஸ் பயணத்திற்கு ஒரு பிரபல்யம் கிடைத்தது. அதை தொடர்ந்து தற்போது மிஸ் மார்வெல், ஸ்பைடர் மேன், மூன் நைட் என பல காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை கொண்டு மல்டிவெர்ஸ் டைம்லைனை உருவாக்கி வருகிறது மார்வெல். இதில் ஆரம்பகட்ட படங்கள் சுமாராகவே இருந்து வரும் நிலையில் அவெஞ்சர் காங் டைனஸ்டி படத்தின் மூலம் மீண்டும் மார்வெல் பழைய பிரபல்யத்திற்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த எண்ணத்திலும் அடியை கொடுத்திருக்கிறது மார்வெல். மார்வெலின் இந்த மல்டிவெர்ஸ் கதையில் முக்கிய வில்லனாக வரும் காங் கதாப்பாத்திரத்தில் ஜோனதன் மேஜர்ஸ் நடித்து வந்தார். முன்னதாக வெளியான லோக்கி, குவாண்டமேனியா படங்களிலும் இவரை காங் கதாப்பாத்திரத்தில் காட்டியுள்ளார்கள்.

ஆனால் தற்போது தனது முன்னாள் காதலியை கொடுமை படுத்திய வழக்கில் ஜோனதன் மேஜர்ஸுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மார்வெல் தனது படங்களிலிருந்து வெளியேற்றி விட்டது. இதனால் காங் கதாப்பாத்திரத்திற்கு புதிய வில்லனை தேட வேண்டிய நிர்பந்தம் மார்வெலுக்கு. ஆனால் ரசிகர்களுக்கோ கடந்த சில படங்களாக வில்லனாக ஜோனதன் மேஜர்சை பார்த்து செட் ஆகிவிட்ட நிலையில் அதை ஈடுசெய்யும் வகையில் புதிய வில்லன் நடிகர் கிடைப்பாரா என்பதே கேள்வியாக உள்ளது.

முன்னதாக இதுபோல் ஜானி டெப் மீதான குற்றச்சாட்டால் அவர் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட் படத்தில் க்ரிண்டல்வால்ட் பாத்திரத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அந்த படம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K