இந்திய பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லாத நுழைவுச்சலுகை ரத்து.. மலேசியா அறிவிப்பு..
மலேசியாவுக்கு செல்லும் இந்திய பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 நாட்கள் விசா இல்லாத நுழைவுச்சலுகை வரும் 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக மலேசிய குடிவரவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்ள முன்னதாகவே முறையான விசா பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகிறது.
புதிய நடைமுறையின் கீழ், விசாவுக்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 1, 2026 முதல் 'MyVISA' இணையதளம் வழியாக தொடங்க உள்ளன. சுற்றுலா விசாவை பயன்படுத்தி பலர் சட்டவிரோதமாக வேலை தேடுவதாகவும், போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்படுவதாகவும் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய விதிகளின்படி பயணிகள் தங்கள் பயண காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் மருத்துவ காப்பீட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விசா விண்ணப்பங்களை பதிவு செய்த 7 வேலை நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்படாவிட்டால் அவை தானாகவே ரத்தாகிவிடும் எனவும், செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் திரும்பத் தரப்படாது எனவும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

