செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (21:06 IST)

பட்டாசு விளையும் பூமி!

தீபாவளியை முன்னிட்டு புதுக்கவிதை:

தலைப்பு - 


பட்டாசு விளையும் பூமி  - கோபால்தாசன்

 
 
சுவாசிக்க கொஞ்சம்
உடம்பில் கொஞ்சமென வாழும்
கந்தக வாசிகள்
 
ஒரு நாளை 
உற்சாகப்படுத்துவதற்கு
அவர்கள்
நாளெல்லாம்
கால்வயிற்றிற்கும்
உயிர் பயத்திற்குமாய் செய்யும்
யுத்தம்
 
பெரியவர்
சிறியவர் என்றில்லாது
அதிகாலையில்
மதியத்திற்கு எடுத்துச் செல்லும்
உணவை விட
 
அவர்கள் 
வாழ்வினுள்ளிருக்கும்
தேவைகளின் எதிர்பார்ப்புகளே
முகம் காட்டி முணுமுணுக்கும்
வெடித்த பட்டாசுத் தாள்களின் 
சிதறல்களில்கூட
அன்றாட பணியின் 
சம்பள பாக்கியின் கணக்கு
எழுதப்பட்டிருக்கலாம்
 
கந்தக பூமியின்
ஆசை கனவுகள் எல்லாமே
பட்டாசுகளை சரம்சரமாய்
தொடுத்துக் கொண்டிருக்கும்
கூடாரங்களிலேயே
தொலைந்து போகிறது
 
அவர்கள்
உட்கொள்ளும் மருந்து
மாத்திரைகளிலிருந்து
குடிக்கும் தண்ணீர் வரையிலும்
ரசாயனத்தின் கை படாமலில்லை
 
ஆமாம்
மற்றவரின் மகிழ்ச்சிக்காக
பாடுபடும் அவர்களின்
வாழ்வில்
மகிழ்ச்சி இருக்கிறதா?

பட்டாசு விளையும் பூமி!
- கோபால்தாசன்