சீனாவில் இந்த ஆண்டு 8.74 மில்லியன் கல்லூரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!
2020 ஆண்டு எந்த நேரத்தில் விடிந்ததோ, அல்லது விடியல் இல்லாத ஆண்டாக பிறந்ததோ தெரியவில்லை. ஆண்டு பிறந்ததில் இருந்து இன்று வரை உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள் என தொடந்து கொண்டே இருக்கிறது.
உலக மக்கள் அனைவருமே கரோனா என்ற அரக்கனின் பிடியில் இருந்து எப்போது விடுதலை ஆவோம் என்று ஏங்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கரோனா என்ற ஒரு தொற்று நோய் பரவத்தொடங்கியது முதல் இன்று மக்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் 2020 வரை, பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடக்க நடவடிக்கைகளினால், வரலாறு காணாதா அளவுக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பெடரல் ரிசர்வ் மதிப்பீட்டின்படி, மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் நெருக்கடியால் வேலை இழந்துவிட்டனர், அமெரிக்கா மட்டும் இன்றி இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் இந்த வேலை இழப்பு பிரச்ச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் இந்த ஆண்டு 8.74 மில்லியன் கல்லூரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் உருவாக்க சீன அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர் என்று கல்வி அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்தார். COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பாதகமான தாக்கங்களைத் தணிக்க, கல்வி அமைச்சகம், 20 க்கும் மேற்பட்ட துறைகளுடன் இணைந்து, வேலைவாய்ப்பை எளிதாக்க கிட்டத்தட்ட 40 முன்னுரிமை நடவடிக்கைகளைத் மேற்கொண்டுள்ளது என்று அமைச்சின் அதிகாரி வாங் ஹுய் கூறினார். இந்த நடவடிக்கைகளின் மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இராணுவ ஆட்சேர்ப்பு உள்ளிட்ட வேலைவாய்ப்புகளில் பல்கலைக்கழக பட்டதாரிகளின் விகிதத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக வாங் கூறினார்.
இந்த ஆண்டு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசாங்கங்கள் தொடர்புடைய துறைகள், பொது நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், செப்டம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி 2.8 மில்லியனுக்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு வேலை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் முதல் புதிய பட்டதாரிகளுக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் வேலைவாய்ப்பு சவாலைச் எதிர்கொள்ள சீனாவுக்கு உதவுகிறது. சீனாவின் முதன்மையான வேலைவாய்ப்பு பதிவு தளத்தில் 6.69 மில்லியன் புதிய பட்டதாரிகள் பதிவு செய்துள்ளனர். இது 24 ஆயிரத்து 365 வளாக சேவை, 15.22 மில்லியன் வேலை வாய்ப்புக்கான தகவல்களை வழங்கியுள்ளது என்று வாங் கூறினார்.
இதற்கிடையில், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளை பெறுவது அதிகரித்துள்ளது. மேலும் 80,000 க்கும் மேற்பட்ட கல்லூரி ஆலோசகர்கள் மற்றும் பயிற்றுநர்கள், வேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாக்களை தயாரிக்கும் முறை மற்றும் நேர்காணலை எதிர்கொள்ளும் திறன்களை வளர்ப்பது பற்றி ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
வேலைவாய்ப்பு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், வேலைவாய்ப்பு ஆலோசனைகளை வழங்கவும் சீனா முழுவதிலும் உள்ள 124 பல்கலைக்கழகங்கள் ஹூபேயில் உள்ள நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளன. வூஹான் மற்றும் ஹூபே பல்கலைக் கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-