வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனுமதி; புதிய விதிகளை வெளியிட்ட தமிழக அரசு!
கொரோனா பாதிப்புகளால் தமிழகத்தில் சொந்த மாநிலங்களுக்கு பல தொழிலாளர்கள் சென்ற நிலையில் அவர்கள் திரும்ப தமிழகம் வருவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் தொழில்துறைகள் முடங்கியதால் தமிழகத்தில் பணிபுரிந்த பல வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றனர்.
தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஜூலை இறுதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இது மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி உள்ளது. தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்களில் பெரும்பாலும் வெளிமாநில பணியார்களே பணியாற்றி வந்ததால் தற்போது தொழில்நிறுவனங்கள் பணியாளர்கள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. இதனால் வெளிமாநில தொழிலாளர்களை தமிழகம் வர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் தமிழகத்திற்குள் வரும் வெளிமாநில தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களில் பிசிஆர் சோதனை மேற்கொண்டு அதில் கொரோனா இல்லை என சான்று பெற்று வந்தாலே உள்ளே அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமானால் பிசிஆர் சோதனை மற்றும் மருத்துவ செலவுகளை சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.