கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பெங்களூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உச்சக்கட்ட எதிர்ப்பை பதிவு செய்து வரும் போராட்டக்காரர்கள், தமிழகத்தை சேர்ந்த திரை நட்சத்திரங்களின் படங்களை இலக்கு வைப்பது தொடர்கதையாகி உள்ளது.
அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய்யின் கடைசித்திரைப்படமான 'ஜனநாயகன்' பல்வேறு தடைகளை கடந்து தென்னிந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது. இந்த சூழலில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3500 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவு வெளியானதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் பெங்களூரில் வைக்கப்பட்டிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் பேனர்களையும் போஸ்டர்களையும் கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதற்கு முன்பு காவிரி பிரச்சனையின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் திரைப்பட பேனர்களும் போஸ்டர்களும் கர்நாடகாவில் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும், தற்போது விஜய் முதல்வராக இருப்பதால் அவர் மீது அதீத கோபமும் வன்மமும் கன்னட அமைப்பினரிடையே மேலோங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் இரு மாநில அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
Edited by Siva
