இத்தாலியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு இந்தியன் ஹவுஸ் என பெயர்.. மியூசியமாக மாற்ற திட்டம்..
இத்தாலியின் வெனெட்டோ பிராந்தியத்தில் அமைந்துள்ள லூசியானா என்ற அழகிய மலைக்கிராமம், இந்திய அரசியலுடன் ஒரு சுவாரசியமான தொடர்பை கொண்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது குழந்தை பருவத்தை கழித்த பூர்வீக வீடு இங்குதான் அமைந்துள்ளது.
சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' வெளியானதை தொடர்ந்து, இந்த வீடு தற்போது மீண்டும் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. 1946-ஆம் ஆண்டு சோனியா மைனோவாக பிறந்த அவர், தனது ஆரம்பகால வாழ்க்கையை இந்த ஆறு அறைகள் கொண்ட கல் வீட்டில்தான் கழித்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு, இத்தாலியில் வசிக்கும் சீக்கிய தொழிலதிபர் சுக்தேவ் சிங் காங் இந்த வீட்டை விலைக்கு வாங்கினார். தற்போது உள்ளூர் மக்களால் 'இந்தியன் ஹவுஸ்' என அழைக்கப்படும் இந்த வீட்டின் முகப்பில் இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளதுடன், சோனியா காந்தி பிறந்த இடம் என்பதை குறிக்கும் நினைவு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டை வாடகைக்கு விடாமல், ஆண்டுதோறும் சுமார் 1,000 யூரோக்கள் செலவு செய்து காங் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். வருங்காலத்தில் சோனியா காந்தியின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை கொண்ட வரலாற்று அருங்காட்சியகமாக இதனை மாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

