வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (12:17 IST)

தோனி ஓய்வு பெறாவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்படுவார்…கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு

தோனி ஓய்வு பெறாவிட்டால், கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, இந்திய அணிக்கு இரண்டு உலகக் கோப்பைகளை (டி20 மற்றும் ஒரு நாள்) வென்று கொடுத்தவர். மிகவும் திறமையான ஆட்டக்காரரான இவர், தனது ரசிகர்களிடமிருந்து “கூல் கேப்டன்” என்ற பட்டத்தையும் பெற்றார்.

38 வயதான தோனி, சமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடினார். இதனால் அவரது ஆட்டம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தோனி, உலகக் கோப்பை போட்டிகளோடு ஓய்வு பெறுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஓய்வு குறித்து தோனி தன்னிடம் எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் தோனி கலந்துகொள்வார் எனவும் கோலி தெரிவித்தார்.

இதனிடையே தோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்குவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுபாடு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தோனியை ஓரங்கட்டுவது தான் சரியான முடிவு எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. தோனி ஓய்வு பெறுவது தொடர்பாக தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத், தோனியிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தோனி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.