திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (10:07 IST)

ஒரு வருடமாக சுனில் நரைனிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.. அவர் கண்டுகொள்ளவே இல்லை – ரோவ்மன் பவல் ஆதங்கம்!

ஐபிஎல் 2024 சீசனின் 31 ஆவது போட்டி நேற்று  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பவுலர்களை திணறவைத்தார். அவர் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 56 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்க்ளை விளாசினார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் சேர்த்தது.

ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவரான சுனில் நரைன் இந்த சீசனில் 265 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறார். அதே போல பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் நரேன் வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணிக்காக விளையாடுவதை கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார்.

இதுகுறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்ஸ்மேனுமான ரோவ்மன் பவல் “கடந்த 12 மாதங்களாக சுனில் நரேனிடம் வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணிக்கு திரும்புமாறு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் கண்டுகொள்ளவே இல்லை. அவரின் நண்பர்களான பிராவோ, பொல்லார்ட் மற்றும் பூரன் ஆகியோர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். டி 20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் தன் மனதை மாற்றிக்கொள்வார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.