பவுலர்களை தண்ணி குடிக்கவைத்த சுனில் நரேன்… அதிரடி சதத்தால் ராஜஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு!
ஐபிஎல் 2024 சீசனின் 31 ஆவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
இதையடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணியில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பவுலர்களை திணறவைத்தார். அவர் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 56 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்க்ளை விளாசினார். அவருக்கு துணையாக அங்கிஷ் ரகுவன்ஷி 30 ரன்களும், ரிங்கு சிங் 20 ரன்களும் சேர்த்தனர்.
இந்த அதிரடி இன்னிங்ஸால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை 223 இழந்து ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பதால் இந்த இமாலய இலக்கைத் துரத்த கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.