தென்னாப்ரிக்காவை 130-க்கு ஆல் அவுட் ஆக்கிய இந்திய வேக புயல்கள்!

Last Modified திங்கள், 8 ஜனவரி 2018 (16:14 IST)
இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்ரிக்கா அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
 
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன், நியூலேண்ட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அந்த அணி முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி பாண்டியாவின் அதிரடியால் 209 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியது.
 
இதனையடுத்து 77 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தென்னாப்ரிக்க அணி தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் 65 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது அந்த அணி. மூன்றாம் நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.
 
மழை காரணமாக மாறி இருந்த சூழலை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். எந்த வீரரையும் நிலைத்து நின்று ஆடவிடாமல் அதிரடியாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். 130 ரன்கள் சேர்ப்பதற்குள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
 
இதன் மூலம் இந்திய அணிக்கு 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா தரப்பில் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தி அணிக்கு பலம் சேர்த்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :