திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 4 நவம்பர் 2018 (12:13 IST)

எனக்கு எல்லாமே டீ 20தான் -17 வருடத்திற்கு முன் விதைப்போட்ட ஷேவாக்

டெஸ்ட் போட்டிகளையும் ஒருநாள் முழுவதும் லீவ் போட்டுவிட்டு உட்கார்ந்து பார்க்கவைத்த அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் 17 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

ஐசிசி 2007 ஆம் ஆண்டுதான் டீ20 போட்டிகளை அங்கிகரித்து உலகக்கோப்பையை நடத்தியது. ஆனால் ஷேவாக்கோ அதற்கு முன்பே டெஸ்ட் போட்டிகளையும் ஒருநாள் போட்டிகளையும் இருபது ஓவர் போட்டிகளாக கருதி விளையாடி வந்தார்.

2001 ஆம் நவம்பர் 3 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடங்கிய டெஸ்ட்டில் இந்தியா முதலில் பேட் செய்தது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொதப்ப இந்தியா 68 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. சச்சின் மட்டும் நின்று போராடிக் கொண்டிருந்தார். அப்போது 6 வது வீரராகக் களமிறங்கினார் சேவாக். அவரின் முதல் டெஸ்ட் போட்டியும் அதுதான். சச்சினோடு சேர்ந்து சிறப்பாக பொறுமையாக விளையாடிய சேவாக் அடுத்த நாள் ஆட்டத்தின் போது தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 105 ரன்களில் அவுட் ஆன அவர், சச்சினோடு சேர்ந்து 5 வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 220 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின் நடந்தது வரலாறு. ஆனால் அந்த வரலாற்றுக்கு விதையை சேவாக் 17 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் விதைத்தார். 14 வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சேவாக்கின் ஸ்ட்ரைக் ரேட் 82. இது, பல முன்னணி பேட்ஸ்மேன்களின் ஒருநாள் ஸ்ட்ரைக் ரேட்டை விட அதிகம். சேவாக்கின் இந்த அதிரடி பேட்டிங் குறித்த கேள்விக்கு அவரது பதில் ‘நான் சந்திக்கும் ஒவ்வோரு பந்தையும் என்னுடைய கடைசி பந்தாகக் கருதியே விளையாடுவேன்’.