1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 11 ஆகஸ்ட் 2018 (12:25 IST)

டெஸ்ட் மேட்ச்: ரன் அவுட் சாதனையாளர் புஜாரா!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை விளையாடி முடித்துள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 
 
முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் துங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 
 
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இந்நிலையில், புஜாரா இந்த போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று 9 வது ஓவரின் 3 வது பந்தை புஜாரா அடித்துவிட்டு ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது ரன் அவுட் ஆனார். 
 
புஜாரா டெஸ்ட் போட்டியில் ரன் அவுட் ஆவது இது முதல் முறையல்ல. இந்திய வீரர்கள் கடைசியாக 10 முறை ரன் அவுட் ஆனதில் 7 முறை புஜாராதான் ரன் அவுட் ஆகியுள்ளார்.
 
செஞ்சூரியனில் (2018), தரம்சாலாவில் (2017), கிங்ஸ்டனில் (2016), ஜோகன்னஸ்பர்க்கில் (2013), கொல்கத்தாவிலும் (2012) என பல முறை ரன் அவுட்டாகியுள்ளார். 
 
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் புஜாராவின் ரன் அவுட் பழக்கம் பற்றி கேட்ட போது, நாங்கள் புஜாராவை உசைன் போல்ட்டாக இருக்க விரும்பவில்லை, புஜாராவாக இருந்தால் போதும் என கேலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.