இந்திய அணியில் எல்லோரும் குடித்தாலும் என்னை மட்டும் கேவலப் படுத்தினார்கள்… பிரவீன் குமார் ஆதங்கம்!
இந்திய அணிக்காக குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் பிரவின் குமார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனவர் பிரவீன் குமார். 2008 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் முத்தரப்பு தொடரை இந்தியா வெல்ல இவர் முக்கியக் காரணிகளில் ஒருவராக இருந்தார்.
அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கும் தேர்வு செய்யப்பட்டு பின்னர் காயம் காரணமாக விலகினார். பின்னர் இவர் சில காலம் இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முன்பு அளித்திருந்த ஒரு பேட்டியில் தான் அதிகமாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகிவிட்டதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “இந்திய அணியில் நான் நுழைந்த போது சீனியர் வீரர்கள் என்னிடம் குடி உள்ளிட்ட சில கெட்ட பழக்கங்களை நிறுத்திக் கொள்ள சொன்னார்கள். இந்திய அணியில் எல்லோரும் குடித்தாலும் என்னை மட்டும் ஒரு சிலர் குடிகாரன் போல கேவலப்படுத்தினர். ஆனால் நான் போட்டியின் போதோ, ஓய்வறையிலோ ஒரு போதும் குடித்தது இல்லை.” எனக் கூறியுள்ளார்.