ஷமி ஆஸ்திரேலியா செல்ல மாட்டாரா?... ரசிகர்களை ஏமாற்றிய அறிவிப்பு!
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.
அதன் பின்னர் பல மாதங்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியை மேற்கொண்டு குணமானார். இதையடுத்து ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் ஷமி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் இறுதி 2 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும் நடக்க உள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடும் வீரர்கள் பெயர் பட்டியலில் ஷமி பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு அழைக்கப்பட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.