1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 1 அக்டோபர் 2022 (08:40 IST)

தீப்தி ஷர்மாவைத் தாக்கும் இங்கிலாந்து ஊடகங்கள்… ஹர்ஷா போக்லே கோபம்!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா குறித்து இங்கிலாந்து ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா- இங்கிலாந்து தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா இங்கிலாந்து வீராங்கனை சாராவை மான்கட் முறையில் அவுட் ஆக்கினார். இந்த விக்கெட்டால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் மான்கட் முறை கிரிக்கெட் விதிகளின் படி சரி என்றாலும், விரைவில் அதை ஐசிசி ரன் அவுட் வகையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்க உள்ள நிலையிலும் இங்கிலாந்து ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் தீப்தி ஷர்மாவை கடுமையான தொடர் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே “இங்கிலாந்து வீரர்கள் இன்னும் தங்கள் காலணிய பார்வையில் இருக்கிறார்கள் போல. ஆனால் இங்கிலாந்து சிந்திப்பதை போலவே உலகின் மற்ற நாடுகளும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. விதிகளின் படி செயல்பட்ட ஒரு வீராங்கனையிடம் இவ்வளவு கேள்விகள் கேட்பது நியாயமில்லை” என்று கூறியுள்ளார்.