புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (12:56 IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு –பிராவோ திடீர் முடிவு

வெஸ்ட் இண்டீஸின் ஆல் ரவுண்டருமான சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லப்பிள்ளையுமான டுவெய்ன் பிராவோ திடீரென தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தூண்களில் ஒருவராக கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த பிராவோ இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். பிராவோ பவுலிங், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என சகலதுறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே 3 முறை வெல்ல உதவியதன் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சத்திலும் பிரோவோவுக்கு நீங்காத இடமுண்டு. கிரிக்கெட்டுக்கு வெளியேயும் ஆட்டம் பாட்டம் என வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துவரும் பிராவோ தமிழ்ப்படம் ஒன்றிலும் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடனான சம்பளப்பிரச்சனை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து அணியில் தேர்வு செய்யப்படாமல் பிராவோ ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் ஐபில், பிக்பேஷ் போன்ற இருபது ஓவர் போட்டித் தொடர்களில் கவனம் செலுத்தி விளையாடி வந்த பிராவோ இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். 35 வயதாகும் பிராவோ சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

14 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 164 ஒருநாள் போட்டிகளிலும் 40 டெஸ்ட் மற்றும் 66 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.