போர்க் கண்ட சிங்கம்..! தோனி பிறந்தநாளுக்கு ரசிகர் செய்த சம்பவம்!
இன்று இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அதை சிறப்பிக்கும் வகையில் வீட்டை ரசிகர் ஒருவர் தயார் செய்துள்ளது வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் எம்.எஸ்.தோனி. தான் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியை பல்வேறு சாதனைகள் படைக்க செய்த தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழ்நாட்டில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இன்று தோனி பிறந்தநாளில் பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளையும், ஹேஷ்டேகுகளையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்ற இளைஞர் தோனியின் பிறந்தநாளையொட்டி தோனி இந்திய ராணுவ உடையில் இருக்கும் படத்தை வீட்டு சுவற்றில் வரைந்து ஹேப்பி பர்த்டே தோனி என்றும் எழுதியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோனியை போற்றும் விதமாக தனது வீட்டையே சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் தயார் செய்து ட்ரெண்டானவர் என்பது குறிப்பிடத்தக்கது.