1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 11 மே 2024 (08:12 IST)

ப்ளான் பண்ணிதான் விளையாண்டோம்… ஆனா அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை – தோல்வி குறித்து ருத்துராஜ்!

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 59 ஆவது லீக் போட்டியில் சி எஸ் கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 3 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களும், ஷுப்மன் கில் 55 பந்துகளில் 104 ரன்களும் சேர்த்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துக் கொடுத்தனர்.

இந்த இலக்கை துரத்தி ஆடவந்த சி எஸ் கே அணி முதல் மூன்று ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஆகியோர் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்ததால் தேவைப்படும் ரன்ரேட் எகிறிக்கொண்டே சென்றது. இதனால் சி எஸ் கே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 196 ரன்கள் மட்டுமே சேர்ந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் “நாங்கள் திட்டமிட்டுதான் விளையாடினோம். ஆனால் அவர்கள் இருவரும் மிகச்சிறப்பாக விளையாடி ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துவிட்டார்கள். எங்களால் விக்கெட்களை வீழ்த்தமுடியவில்லை. இந்த ஆடுகளத்தில் ரன்களைக் கட்டுப்படுத்துவதும் சாத்தியம் இல்லை. நாங்கள் கூடுதலாக 15 ரன்கள் வரைக் கொடுத்துவிட்டோம். அடுத்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. கூடுதல் கவனத்தோடு ஆடுவோம்” எனக் கூறியுள்ளார்.