எங்க புல்லட் பாண்டி கிரிக்கெட் விளையாடினா அவ்ளோதான்! – ஐசிசிக்கு பதிலளித்த அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசி ட்விட்டரில் கேட்ட கேள்வி ஒன்றிற்கு வடிவேலுதான் அதற்கு தகுதியான நபர் என கிரிக்கெட் வீரர் ரவிசந்தர் அஸ்வின் கூறியுள்ளது வைரலாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ள பிரபலங்கள் பலர் பல்வேறு வீடியோக்கள் பதிவிடுவது, ட்வீட் போடுவது, ரசிகர்களோடு உரையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ”வேறு விளையாட்டுகளில் பங்கு பெறும் எந்த வீரர் கிரிக்கெட்டிற்கு சரியான தேர்வாக இருப்பார்?” என கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு கோவில் படத்தில் வரும் புல்லட் பாண்டி என்ற வடிவேலு கதாப்பாத்திரத்தை படத்தை பகிர்ந்துள்ள ரவிசந்தர் அஸ்வின் ”கோவில் படத்தில் வரும் புல்லட் பாண்டி கிரிக்கெட்டிற்கு சரியான ஆளாக இருப்பார். உங்களுடைய விருப்பமான தேர்வு யார்?” என கேட்டுள்ளார்.
தற்போது அந்த ட்வீட் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களது விருப்ப நடிகர்கள் பெயரை பரிந்துரைத்து வருகின்றனர்.