வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:50 IST)

மியான்மரால் இந்தியாவுக்கு பிரச்னை வருமா? எல்லையில் புதிய அச்சுறுத்தல்

Myanmar
2005ஆம் ஆண்டு அப்போதைய இந்திய கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
 
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோகோ தீவுகளில் சீனாவின் இருப்பு இல்லை என்று மியான்மர் அரசு கூறுகிறது. இதை நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறியிருந்தார்.
 
அவரது அதிகாரபூர்வ பயணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு, மியான்மர் கடற்படை தளபதி சோ தெய்ன் டெல்லிக்கு வந்து அட்மிரல் பிரகாஷுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தினார்.
 
1948இல் மியான்மர் சுதந்திரம் பெறும் வரை ஜப்பானிய ராணுவம் இரண்டாம் உலகப் போரின் போது கோகோ தீவை தன் கடற்படை தளமாக பயன்படுத்தியது. மியான்மாரின் ஒரு பகுதியாக மாறிய பிறகு 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இங்கு ஒரு ரேடார் நிலையம் இருந்தது.
 
இந்தியாவின் அந்தமான்-நிகோபாரிலிருந்து வடக்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் 'கிரேட் கோகோ தீவு' அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மியான்மர் எந்த வெளிநாட்டு அரசையும் தனது மண்ணில் ராணுவ தளம் கட்ட அனுமதிக்காது. அந்தத் தீவில் மியான்மர் பாதுகாப்புப் படைகள் மட்டுமே உள்ளன என்கிறது இந்திய வெளியுறவுத்துறை
 
பிரிட்டனின் புகழ்பெற்ற கொள்கை அமைப்பான சாட்டம் ஹவுஸின் புதிய அறிக்கைக்குப் பிறகு கோகோ தீவு மீண்டும் ஒரு சர்வதேச பிரச்சனையாக ஆகக்கூடிய விளிம்பில் உள்ளது.
 
"சமீபத்திய மற்றும் நம்பகமான செயற்கைக்கோள் படங்கள் தீவில் அதிகரித்த செயல்பாடுகளை சுட்டிக்காட்டுகின்றன, இது இந்தியாவிற்கு நல்ல செய்தி அல்ல." என்று அதன் ஆய்வு தெரிவிக்கிறது.
 
மியான்மர் உளவுத்துறை இந்த தீவில் இருந்து கடல்சார் கண்காணிப்பை விரைவில் தொடங்கலாம் என்றும் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மியான்மரின் வலுவான அண்டை நாடான சீனா இந்தத் தீவில் தனக்கான செயல் உத்தி-பொருளாதார நம்பிக்கையை பார்க்கிறது என்றும் சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
செயற்கைக்கோள் படப்பிடிப்பில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் 'மேக்சர் டெக்னாலஜிஸ்', பல மாத ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. இதில் வங்காள விரிகுடாவின் நடுவில் அமைந்துள்ள கோகோ தீவில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதை தெளிவாகப்பார்க்க முடிகிறது.
 
"விமானங்களை பாதுகாப்பாக நிறுத்தும் இரண்டு ஹேங்கர்கள், குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 1,300 மீட்டர் நீள ஓடுபாதை 2,300 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது," என்று டேமியன் சைமன் மற்றும் ஜான் பொல்லாக் நடத்திய இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 
"போர் விமானங்கள் மற்றும் பெரிய சரக்கு ராணுவ விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் 1,800 மீட்டர் முதல் 2,400 மீட்டர் வரை நீளமான ஓடுபாதை தேவைப்படுகிறது," என்று 'ஜேன்ஸ் டிஃபென்ஸ் வீக்லி' என்ற புகழ்பெற்ற பாதுகாப்பு இதழ் தெரிவிக்கிறது.
 
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, "நாட்டின் பாதுகாப்பு தொடர்பான எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்று கூறினார்.
 
மறுபுறம், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று மியான்மர் ராணுவ அரசின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் சாவ் மின் துன் கூறினார்.
 
"மியான்மர் எந்த வெளிநாட்டு அரசையும் தனது மண்ணில் ராணுவ தளம் கட்ட அனுமதிக்காது. அந்தத் தீவில் மியான்மர் பாதுகாப்புப் படைகள் மட்டுமே உள்ளன என்றும் அவை தங்கள் நாட்டைப் பாதுகாக்கின்றன என்றும் இந்திய அரசுக்குத்தெரியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
 
அதிகரித்து வரும் சீன செல்வாக்கு
தீவு மியான்மர் காடுகள்
பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES
மியான்மரில் ராணுவம் நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு புரட்சிக்கு பிறகு அந்த நாட்டில் வெளிநாடுகளின் தலையீடு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது மியான்மரில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.
 
பல தசாப்தங்களாக, சீனா தனது இறக்குமதி-ஏற்றுமதி மற்றும் ஆற்றல் தேவைகளை கடல் வர்த்தகத்தின் மூலம் பூர்த்தி செய்ய 'மலாக்கா ஜலசந்தி' மீது கண் வைத்துள்ளது.
 
சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கடல் பாதை இந்தோனீசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே வருகிறது. இதன் மூலம் சீன கப்பல்கள் இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா வழியாக மேற்கு உலகத்தை சென்றடைகின்றன.
 
பொருளாதாரத் தடைகளாலும், உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர், சீனாவுக்குப் பொருத்தமான நட்பு நாடாக இருக்க முடியும். சீனா, மியான்மரின் மிகப்பெரிய பாதுகாப்பு சப்ளையர் மற்றும் இரண்டாவது பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்.
 
"கடந்த சில தசாப்தங்களாக மேற்கத்திய நாடுகள் மியான்மருக்கு நெருக்குதல் அளித்து கடுமையாக நடந்துகொண்ட விதம் காரணமாக, மியான்மருக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது. மியான்மரின் தேசிய ராணுவம் சீனாவின் லட்சியத்தை நன்கு அறிந்திருக்க்கூடும்.
 
ஆயினும் சர்வதேச அரங்கில் அது தனிமைப்படுத்தப்பட்டால் வேறு என்ன மாற்று வழி இருக்கமுடியும்,” என்று செயல் உத்தி விவகார வல்லுனர் பேராசிரியர் பிரம்மா செல்லானி கருத்து தெரிவித்தார்.
 
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகள் அதாவது கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் சர்வாதிகார அரசுகள் ஆட்சியில் இருப்பது இந்தியாவைப் பொருத்த வரையில் பெரும் கவலையாக உள்ளது.
 
இவற்றில், கம்போடியா போன்ற நாடுகள் பல்வேறு வகையான பொருளாதாரத் தடைகள் அல்லது சர்வதேச தனிமைப்படுத்தலால் பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாக கூறிக்கொள்கின்றன.
 
உதாரணமாக 2021ஆம் ஆண்டில், ஆசியாவின் எதிர்காலம் குறித்த மாநாட்டில் உரையாற்றிய கம்போடிய பிரதமர் ஹுன் சென், "நான் சீனாவை நம்பவில்லை என்றால், நான் யாரை நம்புவது? நான் சீனாவிடம் எதுவும் கேட்கக்கூடாது என்றால், நான் யாரைக் கேட்பது?" என்கிறார்.
 
மியான்மரின் ராணுவ அரசிடமிருந்தும் இதே போன்ற அறிக்கைகள் வரக்கூடும் என்றும் அவை இந்தியாவுக்கு மோசமான செய்தியாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் பயப்படுகிறார்கள்.
 
மியான்மர் நிலநடுக்கம்
பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES
மியான்மர் தனது எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது. மற்றொரு எல்லை தாய்லாந்துடன் உள்ளது. மியான்மரில் குடியேறியுள்ள சில இனக்குழுக்கள், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் காணப்படுகின்றன.
 
’மேக்கிங் எனிமீஸ்: வார் அண்ட் ஸ்டேட் பில்டிங் இன் பர்மா’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் மேரி கேலாஹன், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய வெளியுறவுக் கொள்கையை கற்பிக்கிறார். "மியான்மரின் ஒரே பிரச்னை ராணுவ ஆட்சிதான்" என்று அவர் கருதுகிறார்.
 
''ராணுவம் தேர்தல் நடத்தினாலும் வெளி நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படும். இதில் சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து உதவி கிடைக்கக்கூடும். இந்த இரு நாடுகளும் ஆயுதம் வழங்குவது மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும் உதவுகின்றன. இரண்டாவது குழு. இந்தியா. மற்றும் தாய்லாந்து ஆகும். இந்த இரு நாடுகளுக்கும் தங்களின் சொந்த விஷயங்கள் உள்ளன. மியான்மரில் ராணுவ செல்வாக்கையும் உளவுத்துறையையும் வலுப்படுத்த அவர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே போட்டி ஏற்படுவது இயற்கையானது," என்று அவர் தெரிவித்தார்.
 
சீனாவுக்கு தொடர்பா?
மியான்மர் இந்தியா
கோக்கோ தீவு தொடர்பாகவும் இதே கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அங்கு காணப்படும் செயல்பாடுகளின் பின்னணியில் சீனா உள்ளதா?
 
எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு தூரத்தில் இருந்து சீனா தனது 'நண்பருக்கு' உதவக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்துமாக்கடலில் கால்பதிக்க கோகோ தீவுகள் அதற்கு உதவிகரமாக இருக்கும்.
 
வங்காள விரிகுடாவில் ராணுவ கண்காணிப்பை அதிகரிப்பது மியான்மருக்கு எளிதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
"வெளியுறவுக் கொள்கையாக இருந்தாலும் அல்லது உள்நாட்டுக் கொள்கையாக இருந்தாலும், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நலன்களுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். மியான்மரும் அதையேதான் செய்ய வேண்டும்," என்று மியான்மரின் யாங்கூன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளின் பேராசிரியரான சோன் வின் கூறுகிறார்.
 
"மியான்மரின் புவியியல் நிலை சுவாரஸ்யமானது. வடக்கு மற்றும் மேற்கில் சீனா, இந்தியா போன்ற பெரிய சக்திகள் உள்ள நிலையில், தெற்கு மற்றும் கிழக்கில் அது ஆசியா மற்றும் பசிஃபிக் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக ஆகிறது.
 
மியான்மரின் சந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பங்கிற்காகவும் அண்டை நாடுகள் போட்டியிடுகின்றன என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் எதுவும் மாறப்போவதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.