புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (19:40 IST)

காஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை இந்தியர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்?

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என்ற முடிவு அப்பகுதிக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும் என்று சுதந்திர தின விழா உரையின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

இந்திய மக்களிடம் காஷ்மீர் குறித்து இந்தியா இத்தகைய எண்ணங்களை விதைப்பதன் மூலம், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் சாத்தியமாகிறது என இக்கட்டுரையின்மூலம் கூறுகிறார் டெல்லியில் உள்ள சமூக ஆய்வு நிறுவனமான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் அஷோக் மாலிக்.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஆயுதக் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கை மூலம் தீவிரவாதத் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

புர்ஹான் வானி கொல்லப்பட்டது மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை, காஷ்மீரில் ஒரு புதிய அமைதியற்ற சூழலை உருவாக்கியது. மேலும் ஜிகாதிய ஆயுதப் போராட்டத்துக்கும் பரவலாக அழைப்பு விடுக்கப்பட்டது.

அது காஷ்மீருக்கு சுயாட்சி வேண்டும் என்றோ, காஷ்மீரை பாகிஸ்தானோடு சேர்க்க வேண்டும் என்றோ விடுக்கப்பட்ட அழைப்பு கிடையாது. அது ஒரு பிராந்திய சாம்ராஜ்யத்திற்கான அழைப்பாக இருந்தது.

இதன் முழக்கங்கள், காணொளிகள் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொகுப்புகள் ஆகியேவை காஷ்மீரில் உள்ள பல இளைஞர்கள் மீது தாக்கம் செலுத்தத் தொடங்கின.

2016ஆம் ஆண்டு நடந்த சம்பவங்கள் அங்கு வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியா முழுவதும், இடதுசாரி குழுக்கள் உயர் கல்வி நிறுவனங்களிலிலும், ஊடகங்களிலும் ,பொது இடங்களிலும் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில், காஷ்மீர் பிரிவினைவாதம் குறித்து வன்மையான சொல்லாடல்களை கொண்டு வந்தன.

வரலாற்று ரீதியாக பார்த்தால், காஷ்மீர் பிரச்சனை என்பது இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாக இருக்கவில்லை. காஷ்மீரில் இருக்கும் இந்துவோ அல்லது முஸ்லிமோ, தங்களை மற்ற இந்தியர்களைவிட அவர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்றே கருதினார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில், காஷ்மீரி முஸ்லிம் இளைஞர்கள், இந்தியாவின் மற்ற பகுதிகளில் படிப்பதும், வேலை பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் போன்ற பிரபல தேசிய கல்வி நிலையங்களில், மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கேரளா மற்றும் கோவாவில் பணிபுரிவதைக்கூட பார்க்க முடிகிறது.

இது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை இளம் காஷ்மீரிகளுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களும் இந்நாட்டினர்தான் என்று அவர்கள் உணர்வதற்கு உதவும் என்று அரசு நம்பியிருக்கலாம்.

அது ஓரளவுக்கு நடந்தது என்றாலும் கூட, தீவிர இடதுசாரியினர் மற்றும் சில முஸ்லிம் இளைஞர்களால் ஆதரவு பெற்ற சில கருத்தாக்கங்களும், பிரிவினைவாத சிந்தனைகளும் சந்திக்க இது காரணமாக அமைந்தது. 2016ஆம் ஆண்டிற்கு பிறகு நரேந்திர மோதி மற்றும் இந்திய அரசுக்கு எதிரான கருத்து கொண்டவர்களும், இந்த முற்றிலும் மாறுபட்ட குழுக்களும் ஒத்துப்போக ஓர் இணைப்புப் பாலமாக அமைந்தது.

இது காஷ்மீரில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியதாக, மற்ற இந்தியர்கள் கருதினார்கள்.

நரேந்திர மோதிக்கு தனிப்பட்ட மக்கள் ஆதரவு இருப்பதால் மட்டும் சமீபத்திய இந்திய அரசின் நடவடிக்கை சாத்தியமானது என்று ஒரு நபருக்குள் இந்த விவகாரத்தைச் சுருக்கிவிட முடியாது.

காஷ்மீர் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி அதிகரித்து வருவது, காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளது என்று காரணத்தைக் கூறி அதன் பேரால் எழும் பிரிவினைவாத எண்ணங்கள், காஷ்மீரில் அதிகரிக்கும் போராட்டங்கள், வரலாற்றில் இல்லாத அளவுக்கு அங்கு அதிகரித்துள்ள தீவிரவாத செயல்பாடுகள் ஆகியவையும் அரசின் இந்த நடவடிக்கை சாத்தியமாகக் காரணமானது.

காஷ்மீர் பிரச்னைக்குரிய பகுதி எனும் கருத்தாக்கம் வட இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் பரவியுள்ளதும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கு இரு காரணங்கள் உள்ளன:

1. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் காஷ்மீரில் நடக்கும் ஆயுதப் போராட்டம் மற்றும் அங்கு இந்தியாவுக்கு எதிராக எழுப்பப்படும் கோஷங்கள் ஆகியன இந்தியா முழுவதும் சென்றடைகின்றன. இது எதிர்வினைகளைத் தூண்டியது.

2. ஆந்திரம், மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாவோயிசம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் பிரிவினைவாதக் கோரிக்கைகள் ஆகியவற்றை 1990கள் வரை இந்தியப் பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டன. இப்போதோ காஷ்மீர் பிரச்சனை தவிர மற்ற அனைத்தும் அதிகமான ஒலி எழும்பாத வகையில் அமைதியாக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக காஷ்மீர் பிரச்சனை நாடெங்கும் ஆழமாக உணரப்பட்டது.

பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மார்ச் 1ஆம் தேதி அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரைப் பற்றிய செய்திகள், இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாநிலமான கேரளாவில் , அந்த இரண்டு வாரங்களுக்கு மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்ததாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கூறுகிறார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரில் அபிநந்தன் சம்பவத்துக்கு இரண்டு வார காலத்துக்கு முன்னரே, புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேலான இந்திய துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். வடக்கே உத்தரப் பிரதேசம், வடகிழக்கில் உள்ள அஸ்ஸாம், தெற்கே இருக்கும் கர்நாடகம் என அவர்கள் 16 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மெதுவாகவும் நுணுக்கமாகவும் காஷ்மீர் இந்தியா முழுமைக்குமான விவகாரம் ஆனது.
அபாயகரமானதாக இருந்தாலும், கடந்தகாலத்தில் இருந்து விலகி புதிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற அரசியல் சூழலையும் இது உருவாக்கியது.