1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (22:06 IST)

ஆப்கானிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்களின் நிலை எப்படி? பிபிசி கள நிலவரம்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்தது. இத்தகைய சூழ்நிலையில், தலைநகர் காபூல் உள்ளிட்ட பிற பகுதிகளில் பெரிய தீவிரவாத குண்டுவெடிப்புகள் அல்லது தாக்குதல்களால் பதற்றம் நிலவுகிறது.

 
சண்டை முடிந்து விட்டது, ஆனால் நாட்டில் அமைதி ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது.

 
இந்த சூழ்நிலையில் நான் காபூலின் மையப்பகுதியை அடைந்தேன். தடிமனான இரும்புத் தாள்களால் ஆன கதவை நான் தட்டியபோது, சிறிய வலை ஜன்னலுக்குப் பின்னால் இருந்து ஒரு முகம் சந்தேகத்துடன் நான் யார் என்று கேட்டது.

 
அவர்தான் பழமையான அசாமாயி கோவிலின் பூசாரி மற்றும் ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கும் சில இந்துக்களில் ஒருவரான ஹர்ஜித் சிங் சோப்ரா.
 
 
இந்த கோவிலில் அம்மன் வழிபாடு நடக்கிறது. இங்கு நித்திய ஜோதி எரிகிறது. இங்கு ஒரு சிவன் ஆலயமும் உள்ளது. இதனுடன் ஸ்ரீமத் பாகவத் மற்றும் ராமாயணமும் படிக்கப்படுகிறது.

 
காவலரைத் தவிர, ஹர்ஜீத் சிங் தனது மனைவி பிந்தியா கெளருடன் கோயிலின் இந்த பெரிய முற்றத்தில் வசிக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக இருவரது குடும்பங்களும் இந்தியாவிற்கு குடிபெயர்ந்துவிட்டன. ஆனால் ஹர்ஜித் மற்றும் பிந்தியா இங்கேயே உள்ளர்.

 
 
தாக்குதலுக்கு பயந்து, கோவிலில் வழிபாடுகள் மிகவும் அமைதியாகவே செய்யப்படுகின்றன.. வழிபாடுகள் பற்றித்தெரிய வந்தால் தீவிரவாத தாக்குதல்கள் நடக்குமோ என்ற அச்சத்தில் இதை படம்பிடிக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை.

 
"நாங்கள் அம்மனின் காலடியில் அமர்ந்திருக்கிறோம். நாங்கள் அவளுக்கு சேவை செய்கிறோம். நாங்கள் பயப்பட மாட்டோம். கோவிலை விட்டு வெளியேற மாட்டோம்," என்று ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானின் கோஸ்த் பகுதியில் மசாலா வியாபாரியாக இருந்த ஹர்ஜீத் கூறுகிறார்.
 
 
"(ஆப்கானிஸ்தானில்) குறைந்தது 8-11 இந்துக்கள் மட்டுமே உள்ளனர். ஏழு-எட்டு வீடுகளே உள்ளன. அதில் ஒன்று எனது வீடு. கஜனியில் ராஜாராம் இருக்கிறார். ஒன்று அல்லது இரண்டு வீடுகள் கார்த்தி பர்வானில் உள்ளன. ஒன்று இரண்டு வீடுகள் ஷேர் பஜார் பகுதியில் இருக்கின்றன. அவர்கள் ஏழைகள். பாஸ்போர்ட் என்றால் என்ன என்று கூட தெரியாதவர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் படிக்காதவர்க. அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இங்கு வளர்ந்தவர்கள்,"என்று அவர் மேலும் கூறினார்.

 
"முதலில் ஜலாலாபாதில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதன் பிறகு சுமார் 600-700 பேர் இந்தியா சென்றுவிட்டனர். ஷேர் பஜாரில் (காபூலில்) வெடிகுண்டு வெடித்ததில் 30 வீடுகள் சேதமடைந்தன.அதன் பிறகு 200 பேர் இந்தியா திரும்பினர். தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பயத்தில் இந்தியாவுக்குச் சென்றுவிட்டனர். கார்த்தி பர்வானில் தாக்குதல் நடந்தபோது, 50-60 பேர் இந்தியாவுக்குச் சென்றனர். நாங்கள் இங்கு கோவிலில் சேவை செய்வதற்காகத் தங்கியுள்ளோம். இந்துக்கள் அல்லது சீக்கியர்கள் யாருக்குமே இங்கே தங்க மனமில்லை. எல்லோரும் இந்தியாவுக்குச் செல்ல விரும்புகிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
 
2018-ல் ஜலாலாபாதில் நடந்த தற்கொலைத் தாக்குதலிலும், 2020-ல் காபூலில் உள்ள குருத்வாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலிலும் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜூன் மாதம், காபூலில் உள்ள கார்த்தி பர்வான் குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

 
பிந்தியா கெளரின் முழு குடும்பமும் இந்தியாவில்தான் உள்ளது. இங்கே அவரது முழுநாளும் வீட்டு வேலைகள் மற்றும் கோவிலுக்கு சேவை செய்வதில் கழிகிறது.

 
"முன்பு இங்கே கோவிலில் 20 குடும்பங்கள் குடியிருந்தன. அவர்களில் சிலர் பயந்து வெளியேறத் தொடங்கினர். பின்னர் ஐந்து குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. பின்னர் மெள்ள மெள்ள எல்லோருமே சென்றுவிட்டனர். முன்பு நிலைமை மிக மோசமாக இருந்தது. குண்டுவெடிப்புகள் நடந்தன. கடந்த ஆண்டு தாலிபன்கள் வந்தனர். பின்னர் மீதமிருந்தவர்களும் வெளியேறினர், இப்போது நாங்கள்மட்டுமே இருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
 
அவரது வீட்டிற்கு அருகே உள்ள காலி அறைகளும், கதவுகளில் தொங்கும் பூட்டுகளும் கடந்த காலக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
 
 
வெளியேறும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்

 
கார்த்தி பர்வான் பகுதி, கோவிலில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது. காபூலின் ஒவ்வொரு பகுதியையும் போலவே இங்கும் எல்லா இடங்களிலும் சோதனைச் சாவடிகள் உள்ளன. தெருக்களில் தாலிபன்கள் துப்பாக்கிகளுடன் காணப்படுகின்றனர்.

 
ஆப்கானிஸ்தானின் கார்த்தி பர்வான் பகுதி ஒரு காலத்தில் ஆப்கான் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் கடைகள் மற்றும் வீடுகளால் நிறைந்திருந்தன.

 
"ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் நிறைந்திருந்தனர். கரன்சி, ஆடைகள் பிசினஸ் இந்துக்களுக்கு சொந்தமானது. இந்து மருத்துவர்கள் இருந்தனர். மளிகை கடைகளையும் இந்துக்கள் நடத்தினர். அரசு பதவிகளில் இந்து மருத்துவர்கள் இருந்தார்கள், பொறியாளர்கள் இருந்தனர், அவர்கள் ராணுவத்திலும் இருந்தனர்,"என்று உள்ளூர்வாசியான ராம் சரண் பசீன் கூறுகிறார்.

 
பல ஆண்டுகளுக்கு முன்பு, காபூலில் ராக்கெட் மழை பொழிந்தது. அவரது வீட்டின் மீதும் ராக்கெட் விழுந்தது, ஆனால் அது வெடிக்கவில்லை என்று அவர் நினைவுகூர்கிறார்.
 
 
"நான் வீட்டில் இருக்கவில்லை. என் மனைவி வீட்டில் இருந்தாள். கடவுள் காப்பாற்றினார். ராக்கெட் வெடித்திருந்தால் என் வீடும் இருந்திருக்காது, என் மனைவியும் இருந்திருக்க மாட்டார்," என்று ராம் சரண் பசீன் தெரிவித்தார்.
 
ஆனால் இன்று தாலிபன்களின் ஆப்கானிஸ்தானில், மக்கள் பயத்தின் நிழலில் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மிக முக்கியமான வேலை இருக்கும்போதுமட்டும் சிறிது நேரத்திற்கு வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர்.
 
 
1992 க்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள், இந்தியா அல்லது பிற நாடுகளுக்கு குடிபெயர்வு ஆகியவை காரணமாக இன்று அவர்களின் எண்ணிக்கை சுமார் 100 ஆகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
 
 
 
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் அமைப்பான Porsesh Research and Studies Organisation, சிறுபான்மையினருக்காக செயல்படுகிறது. தாலிபன்களின் வருகைக்குப் பிறகு அந்த அமைப்பு இப்போது மூடியே உள்ளது. இந்த அமைப்பில் பணிபுரிந்த பலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

 
"ஆப்கானிஸ்தானில் இருந்து இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் வெளியேறிய வரலாறு 1980 களில் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் தலையாட்டி கம்யூனிஸ்ட் அரசுகளுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றிலிருந்து தொடங்குகிறது. நாட்டில் கட்டுப்பாடுகள், அட்டூழியங்கள் காரணமாக சிறுபான்மையினர் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்கிறது," என்று ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் நிலை குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் அந்த அமைப்பு கூறியுள்ளது,

 
"1960 முதல் 1980 வரையிலான காலம் ஆப்கானிஸ்தானின் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மிகவும் அமைதியானதாக இருந்தது. அவர்கள் லாலா அல்லது படா பாய் (மூத்த சகோதரர்) என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் சாதாரண மக்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்தனர்," என்று இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
 
 
ஆனால் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 பைசாகி அன்று ஜலாலாபாதில் 13 சீக்கிய யாத்ரீகர்களும் நான்கு முஸ்லிம் பாதுகாவலர்களும் துப்பாக்கி நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது பெரும் எண்ணிக்கையில் சீக்கியர்களின் வெளியேற்றம் தொடங்கியது.
 
 
 
கடத்தல், மத, சமூக மற்றும் அரசியல் துன்புறுத்தல், அவர்களின் நிலம் மற்றும் சொத்துக்களை அபகரித்தல் போன்றவற்றால் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சார நிலை மோசமடைந்தது.

 
இந்த அறிக்கையை எழுதிய அலி தாத் முகமதி, இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் எதிரான பாகுபாடுகள் குறித்துப்பேசினார். "அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம், அவர்களின் குழந்தைகள் மோசமாக நடத்தப்பட்டனர். அவர்களை முஸ்லிம் அல்லாதவர்கள், இந்து கச்சாலூக்கள் (வேக வைத்த உருளைகிழங்கு) என்று அழைத்தனர். வேறு வழியில்லாத சூழலில் அவர்கள் இருந்தனர். ஒன்று அவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. பின்னர் அவர்களது சொத்துக்கள், வீடுகள் போராளிகளின் தலைவர்களால் கைப்பற்றப்பட்டன,"என்று அவர் கூறினார்.

 
இந்து கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் அழிக்கப்பட்டு குப்பைத் தொட்டிகளாக அல்லது கால்நடைகளை கட்டிவைக்கும் இடங்களாக பயன்படுத்தப்படுவது,10 மாகாணங்களில் நடத்தப்பட்ட களஆய்வில் தெரியவந்ததாக, காபூலில் வசிக்கும் முகமதி தெரிவிக்கிறார்.
 
 
தப்பிப்பிழைத்த சில குருத்வாராக்கள் கொடிய தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாயின.
 
 
இந்த ஆண்டு ஜூன் மாதம் கார்த்தி பர்வான் பகுதியில் உள்ள மிகப் பழமையான குருத்வாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்டார்.குருத்வாரா மிகமோசமாக சேதமடைந்தது.

 
நான் கார்த்தி பர்வான் குருத்வாராவை அடைந்தபோது அங்கு தாலிபன்களின் நிதி உதவியுடன் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

 
குருத்வாராவைச் சுற்றி நடந்து, படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது ஜூன் மாதம் நடந்த தாக்குதலில் குருத்வாராவுக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெரிகிறது.

 
சீக்கியர்களின் வரலாறு தொடர்பான புத்தகங்கள், நாற்காலி மேசைகள், பாதுகாப்பு கேமராக்கள், ஜன்னல்கள், தரைவிரிப்புகள், அலமாரிகள் என பல பொருட்கள் அன்றைய தினம் எரிந்துபோயின. பழுதுபார்ப்பவர்கள் அனைவரும் உள்ளூர் ஆப்கானியர்கள் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. குருத்வாராவில் சிலர் கற்களை தேய்த்துக்கொண்டிருந்தனர். சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
 
 
தாக்குதல் நடந்தபோது, குருத்வாராவின் பராமரிப்பாளரான குர்னாம் சிங் ராஜ்வன்ஷ் பக்கத்திதான் இருந்தார்.

 
"என் வீடு குருத்வாராவுக்குப் பின்னால் உள்ளது, நாங்கள் அங்கு வசிக்கிறோம். குருத்வாரா தாக்கப்பட்ட செய்தி வந்ததும் நாங்கள் இங்கு சென்றோம். சாலை மூடப்பட்டிருப்பதைப் பார்த்தோம். குருத்வாராவில் 18 ஆண்கள் இருந்தனர். சவீந்தர் சிங் என்பவர் குளியலறையில் வீரமரணம் அடைந்தார்,"என்று அவர் கூறினார்.

 
மற்ற இந்துக்கள் மற்றும் சீக்கியர்களைப் போலவே குர்னாம் சிங்கும் இந்த நேர்காணலுக்குப் பிறகு இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். தொடர்ச்சியான தாக்குதல்களால் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை காரணமாக, இந்திய விசாவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் மக்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.
 
 
 
காபூலுக்கு வருவதற்கு முன், டெல்லி திலக் நகரில் உள்ள குரு அர்ஜுன் தேவ் ஜி குருத்வாராவில் ஹர்ஜித் கெளரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவர் சில காலத்திற்கு முன்பு காபூலில் இருந்து டெல்லி வந்தார்.
 
 
அவரது மூன்று குழந்தைகளில் இளையவருக்கு இதயத்தில் ஓட்டை உள்ளது. டெல்லியை அடைந்த பிறகு அவர் கவலையில்லாமல் நிம்மதியுடன் காணப்படுகிறார்.
 

 
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு முன்பில் இருந்தே நிலைமை மோசமாக இருந்ததாகவும், தற்போது நிலைமை மேலும் மோசமாகிவிட்டதாகவும் ஹர்ஜீத் கூறினார். குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி தோட்டாக்களால் உயிருக்கு அதிக ஆபத்து இருந்தது. நாள் முழுவதும் வீட்டிற்கு உள்ளே இருக்கவேண்டி இருந்தது. குழந்தைகளின் கல்வி முடங்கிப்போனது என்று அவர் குறிப்பிட்டார்.

 
மறுபுறம், இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குச்சென்ற சிலர், குடும்பம் அல்லது வணிகம் அல்லது சொத்து நிர்பந்தம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வர வேண்டியிருந்தது என்று குர்னாம் சிங் கூறுகிறார்.
 
 
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன
 
சாலையின் ஒரு ஓரத்தில் கார்த்தி பர்வான் குருத்வாரா உள்ளது. சாலையின் மறுபுறத்தில் சீக்கிய கடைகள் உள்ளன. அவற்றில் ஒன்று கடந்த ஜூலை மாதம் கையெறிகுண்டு மூலம் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது.
 
 
இந்த தாக்குதல் காரணமாக இந்த யுனானி மருந்து கடைக்கு நான்கு லட்சம் ஆப்கானிஸ்தான் ரூபாய் வரை சேதம் ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 
மதியம் தாக்குதல் நடந்த நேரத்தில், கடையின் உரிமையாளர் அரிஜீத் சிங் அருகில் உள்ள கடைக்கு உணவு சாப்பிடச் சென்றிருந்தார். அப்போது அவருக்கு பலத்த சத்தம் கேட்டது.
 
 
"என்ன நடந்தது என்று பார்க்க நான் வெளியே ஓடினேன்.என் கடையில் இருந்து புகை வருவதை பார்த்தேன். கவுண்டர் நடுவில் கிடந்தது. அது தூள்தூளாகி இருந்தது. பொருட்கள் கீழே சிதறிக் கிடந்தன."என்றார் அவர்.
 
 
ஆனால் தீவிரவாதம் அரிஜீத்தின் வாழ்வில் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

 
கார்த்தி பர்வான் குருத்வாரா தாக்குதலில் கொல்லப்பட்ட சவீந்தர் சிங் அவரது சகோதரியின் கணவர். முன்னதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் 2018 தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
 
 
கையெறி குண்டு தாக்குதலால் இந்து மற்றும் சீக்கியர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று மற்றொரு யுனானி மருந்து கடை நடத்தி வரும் மற்றொருவரான சுக்பீர் சிங் கால்சா கூறினார்.
 
 
"நேற்று அங்கு (தாக்குதல் நடந்தது) இன்று இங்கே இருக்கலாம். என் கடை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும்.ஆனால் நான் இப்போதுதான் மாலை 3.30 மணிக்கு கடைக்கு வந்தேன். மனைவி குழந்தைகள் என்னை போக அனுமதிப்பதில்லை. குருத்வாராவும் மூடப்பட்டுள்ளது. குருவை தரிசிக்க முடிவதில்லை.. என் கஷ்டங்கள் எனக்கு மட்டுமே தெரியும்," என்றார் அவர்.
 
 
சுக்பீர் சிங் கால்சாவின் வீட்டில் அனைவருக்கும் இந்திய விசா கிடைத்துள்ளது. ஆனால் அவரது மனைவிக்கு விசா கிடைக்கவில்லை. அதற்காக அவர் காத்திருக்கிறார். குடும்பத்தில் சிலருக்கு இந்திய விசா கிடத்த நிலையில், மற்றவர்கள் விசாவுக்காகக் காத்திருக்கும் பல குடும்பங்கள் இங்கே உள்ளன.
 
 
 
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பற்றிக்குறிப்பிட்ட தாலிபன்கள் அனைவரையும் பாதுகாப்பதே தங்கள் கொள்கை கூறுகிறார்கள்.

 
"அனைவரையும், அதாவது, ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதே எங்கள் கொள்கை, இது இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கும் பொருந்தும். அவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம். அவர்கள் ஏதேனும் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், இந்த தகவலை எங்கள் படைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பாதுகாக்கவே படைகள் உள்ளன,"என்று காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஃகாலித் சாத்ரான் தெரிவித்தார்.

 
தாலிபன்கள் கனரக வாகனங்களில் துப்பாக்கிகளை ஏந்தியபடி தெருக்களில் ரோந்து செல்வதைக் காணலாம்.

 
ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக போர், குண்டுவெடிப்பு, இலக்கு கொலைகளின் நிழலில் வாழ்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சர்வதேச நிதியுதவி நிறுத்தம், வறட்சி மற்றும் நிலநடுக்க நிலைமைகள், பொருளாதாரத்தின் மோசமான நிலை ஆகியவை காரணமாக மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவு மற்றும் மருந்துகளை வாங்க மக்கள் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
பாமியானில் இப்போது பௌத்தர்கள் இல்லை, ஹெராட் மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து கிறிஸ்தவர்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். அதேபோல ஆப்கானிஸ்தானில் இந்துக்களும் சீக்கியர்களும் ஒருகாலத்தில் வாழ்ந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற அச்சம் இப்போது நிலவுகிறது.