செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:58 IST)

ஸ்ரீலங்கன் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் என்ன?

Srilankan Airlines
இயந்திர கோளாறு ஏற்பட்ட 3 விமானங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக, தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆண்டறிக்கையின்படி, ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனம் வசம் 24 விமானங்கள் உள்ளன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருவதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
இதன்படி, ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் கடனில் இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த கடனுக்கான வட்டியை செலுத்தும் போது, ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனத்துக்கு லாபம் கிடையாது எனவும் அமைச்சர் கூறுகின்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சீன சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் திட்டத்தை அரசாங்கம் வகுத்த நிலையில், சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான விமான சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போதே, 3 விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

''பல மாதங்களாக 3 இயந்திரங்களை செய்துகொள்வதற்கு எம்மிடம் பணம் இல்லை" என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் கூறினார்.

இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்களுக்கும், லீசிங் கட்டணத்தை செலுத்த வேண்டும் என உடன்படிக்கையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

உயர்மட்ட கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது?

ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் இடையில் கடந்த புதன்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, குறித்த 3 விமானங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

குறித்த விமானங்களை சரி செய்வதற்கு தேவையான பொருட்களுக்கு உலகளாவிய ரீதியில் தட்டுப்பாடு நிலவி வருகின்றமையே, இந்த விமானங்களை சரி செய்ய முடியாமைக்கான காரணம் என ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் அதிகாரிகள், அமைச்சரிடம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது நாட்டின் பொருளாதார பிரச்னையையும் தாண்டி, உலகளாவிய ரீதியில் காணப்படும் பொருள் தட்டுப்பாடே இதற்கான காரணம் என இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் என்ன சொல்கின்றது?

போயிங் விமான நிறுவனத்திடம் இந்த விமானங்களை சரி செய்துகொள்வதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த இயந்திர கோளாறுகளை சரி செய்வதற்கு பாரிய நிதி செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

விமானத்தில் கோளாறு ஏற்பட்ட பகுதியை இங்கிருந்து எடுத்து சென்றே, அவர்கள் அதனை சரி செய்ய வேண்டும் என கூறிய அதிகாரி, அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

நிதி இல்லாத பிரச்னையை விடவும், போயிங் விமான நிறுவனத்திடம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியாத பிரச்னையே காணப்படுவதாக அவர் கூறுகிறார்.

ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனம் வசம் காணப்படுகின்ற 24 விமானங்களில் தற்போது 21 விமானங்கள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டு வருவதை ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.