வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2023 (10:28 IST)

குழந்தையை பிரசவித்த கையோடு ஆம்புலென்சில் சென்று பொதுத் தேர்வு எழுதிய இளம்பெண்

பிகாரில் உள்ள பங்கா மாவட்டத்தில் வாழும் ஒரு பெண்ணுடைய தைரியம், தன்னம்பிக்கையின் கதை தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது. சமீப நாட்களில் பிகாரில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் பங்கெடுத்தவர்களில் 22 வயதான ருக்மிணியும் ஒருவர்.
 
ருக்மிணி திருமணம் ஆவதற்கு முன்பாகத் தனது சொந்த ஊரான கட்டோரியில் படித்துக் கொண்டிருந்தார். பிறகு திருமணமாகி, அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பைல்வா என்ற கிராமத்தில் இருக்கும் கணவர் வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார்.
 
அதனால், அவரது படிப்பு தடைபட்டது. ஆனால், மீண்டும் தான் படிப்பைத் தொடர வேண்டுமென்று விரும்பிய ருக்மிணி, 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்குப் படித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே ருக்மிணி கர்ப்பமாகியிருந்தார்.
 
அவர் கர்ப்பமாக இருந்தபோதே தேர்வுக்குத் தயாராகி, பிப்ரவரி 14ஆம் தேதியன்று கணிதத் தேர்வை எழுதினார். ஆனால், அதையடுத்து அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 
அங்கு புதன்கிழமையன்று(பிப்ரவரி 15) காலை 6 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தினர் அனைவரும் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையைப் பார்த்த மகிழ்ச்சியில் திளைத்து, கொண்டாடிக் கொண்டிருந்தபோது ருக்மிணி ஒரு முடிவெடுத்தார்.
 
அந்த முடிவு காரணமாக அவரது தைரியமும் தன்னம்பிக்கையும் பலராலும் பரவலாகப் பேசப்படுகின்றது.
ருக்மிணிக்கு குழந்தை பிறந்து சில மணிநேரத்தில் மற்றொரு பாடத்திற்கான பிகார் மாநில 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. அந்தத் தேர்வில் பங்கெடுக்க வேண்டுமென்று அவர் முடிவு செய்தார்.
 
இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனால், இதுபோன்ற நிலையில் எப்படித் தேர்வெழுத முடியும் என்று குடும்பத்தினர் அவருடைய உடல்நலன் குறித்து கவலை கொண்டனர். ஆனால், ருக்மிணி பிடிவாதமாக இருந்தார்.
அதைத் தொடர்ந்து மருத்துவர்களிடம் அவருடைய முடிவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
 
மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்?
ருக்மிணியின் மன உறுதியையும் துணிச்சலையும் பார்த்த மருத்துவர்கள், தேர்வில் பங்கெடுக்க அனுமதித்தனர்.
 
மருத்துவமனையின் தலைமை மருத்துவர் போல்நாத் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசியபோது, "அனைவரும் ருக்மிணியை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், தேர்வை எழுத வேண்டுமென்ற அவரது பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியவில்லை.
 
"அவருக்கு தேர்வு மீது இருந்த ஆர்வத்தைப் பார்த்து, ருக்மிணியை ஆம்புலென்சில் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத வைக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. அவர் அங்கு சென்று தேர்வு எழுதிவிட்டுத் திரும்பும் நேரத்தில், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் நிர்வாகம் உறுதியாக இருந்தது."
 
இதன்படி, ருக்மிணியை தேர்வு நடக்கும் மையத்திற்கு ஆம்புலென்சில் மருத்துவமனை நிர்வாகம் அழைத்துச் சென்றது. அவருக்குத் துணையாகச் சில பணியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர் வெற்றிகரமாகத் தேர்வை முடித்ததும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டார்.
 
ருக்மிணி, பாங்கா மாவட்டத்தில் உள்ள கட்டோரியா என்ற கிராமத்தில் வளர்ந்தார். அங்குள்ள ஒரு பள்ளியில் அவர் திருமணத்திற்கு முன்பு படித்து வந்துள்ளார். ஆனால், திருமணமான பிறகு அவர் தாய்வீட்டில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பைல்வா என்ற கிராமத்திற்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அங்கு சென்ற பிறகு அவரது படிப்பு தடைபட்டது.
 
பிபிசியிடம் பேசிய ருக்மிணியின் மாமனார் சுரேந்திர தாஸ், "அவர் நன்றாகப் படித்துக் கொண்டிருந்தார். ஆனால், சில காலம் படிப்பு தடைபட்டது. ருக்மிணிக்கு 10ஆம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆகையால் நாங்கள் அதைத் தடுக்காமல் ஒத்துழைத்தோம்.
 
பிரசவத்திற்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்தபோதே இரண்டு தேர்வுகளை எழுதினார். இப்போது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம். அவர் வீட்டில் இருந்தே தேர்வுக்குத் தயாராகவும் எழுதவும் நாங்கள் உதவுகிறோம். முழு குடும்பமும் மிக மகிழ்ச்சியாக உள்ளது," என்று தெரிவித்தார்.
 
கு
ழந்தையைப் பிரசவித்தபோதும் படிக்க வேண்டுமென்ற தனது கனவைக் கைவிடாமல், தைரியமாகச் சென்று தேர்வெழுதியதாக ருக்மிணி சமூக ஊடகங்களில் பாராட்டப்படுகிறார். அவர் மன உறுதியோடு சென்று தேர்வு எழுதியது பேசுபொருளாகியுள்ளது.